Thursday, December 31, 2015

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 4


பாடல்:
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து 
    மறைபோதும் எங்கள் பரமன் 
நதியோடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து என் 
    உளமே புகுந்த அதனால் 
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் 
     கொடு நோய்கள் ஆன பலவும் 
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
     அடியார் அவர்க்கு மிகவே.                      4

பொருள்:
பிறை போன்ற நெற்றியையுடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின் (வடம்-ஆலமரம்) கீழிருந்து வேதங்களையருளிய எங்கள் பரமன், கங்கை நதியையும் கொன்றை மாலையையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால் ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையனவாகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 3
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 5

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 3


பாடல்:
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து 
    உமையோடும் வெள்ளை விடைமேல் 
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் 
    உளமே புகுந்த அதனால் 
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி 
    திசை தெய்வமான பலவும் 
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
    அடியார் அவர்க்கு மிகவே.                       3

பொருள்:
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீ ற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்துள்ள சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால் இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்களான பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 2
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 4

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 2


பாடல்:
என்போடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க 
     எருதேறி ஏழையுடனே 
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் 
     உளமே புகுந்த அதனால் 
ஒன்பதோடு ஒன்றோடு ஏழு பதினெட்டொடு ஆறும் 
     உடனாய நாள்கள் அவைதாம் 
அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
     அடியார் அவர்க்கு மிகவே.                    2

பொருள்:
திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை, ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி, பொன்போல் ஒளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்தால், ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம், ஒன்பதோடு ஒன்று - பத்தாவது விண்மீனான மகம்; ஒன்பதோடு ஏழு - பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது விண்மீனான திருவாதிரை முதலான பயணத்திற்கு விலக்கப்பட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்போடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 3

Friday, December 25, 2015

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1

வரலாறு:

குறிப்பு : இந்த வரலாற்றை பற்றி என்னிடம் எந்த ஆதாரமும் கிடையாது. நான் இணையத்தில் படித்ததை இங்கு பதிவிடுகிறேன்.

   கோளறு பதிகம் திருஞனாசம்பந்தரால் சிவபெருமானுக்காக பாடப்பட்டது. 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர். முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டில் சமண மதம் தழைத்தோங்கி இருந்ததாகவும், மன்னனும் சமண மதம் தழுவியதாகவும் கூறப்படுகிறது.(பொதுவாக பாண்டிய நாட்டில் சைவ மதமே அதிக மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது). அச்சமயத்தில் பாண்டிய நாட்டின் அரசி அப்பர் மற்றும் திருஞனசம்பந்தரையும் சைவ மதத்தை பரப்ப அழைக்கப்பட்டார். அப்பொழுது இருவரும் திருமறைக்காட்டில் (வேதாரண்யம் ) இருந்தனர். அந்த காலகட்டத்தில் சமணர்கள் மாந்திரிகத்தில் சிறந்து விளங்கியதாகக் கூறப்படுகிறது. ஆதலால், மாணிக்கவாசகர் சிறிது ஐயப்பட்டார். அவரது அச்சத்தைப் போக்கும் விதத்தில் சம்பந்தர் இப்பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது. இப்பாடலில் அவர் பாடியது என்னவெனில் ஒரு நல்ல சிவனடியாருக்கு கோள்களோ, தீய மந்திரங்களோ, காட்டு விலங்குகளோ எந்த தீங்கும் செய்யாது என்பதுவாகும்.


பாடல்:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 
    மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் 
     உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி 
     சனி பாம்பிரண்டும் உடனே 
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
    அடியார் அவைக்கு மிகவே.                        1
பொருள்:
   எம்பெருமான் மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு (பார்வதி) தன் உடம்பினில் பாகம் கொடுத்தவனுமாகிய சிவபெருமான் (அர்த்தநாரிஸ்வரர்), உலகில் உள்ள உயிர்களின் நன்மைக்காக பாற்க்கடலில் இருந்து வந்த ஆலகால விடத்தை அருந்தித் தன் திருக்கழுத்தில் தாங்கியவனும் இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு , களங்கமில்லாத பிறை நிலவையும் கங்கையையும் தன் திருமுடிதனில் அணிந்து கொண்டு இருப்பவனுமாகிய எம்பெருமான் ஈசன் என் உளம் (உள்ளம் ,மனம்) முழுவதும் நிறைந்து சிவசிந்தையில் நான் இருப்பதால் சூரியன்(=ஞாயிறு), சந்திரன்(=திங்கள்,மதி), செவ்வாய், புதன், குரு(=வியாழன்),சுக்கிரன்(=வெள்ளி), சனி மற்றும் பாம்பு கிரகங்களான ராகு ,கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் அற்ற என் போன்ற சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 2